search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு செலவில் சிகிச்சை"

    கந்தன்சாவடி மருத்துவமனையில் கட்டுமான பணியின்போது இரும்பு சாரம் சரிந்த விபத்தில் காயம்அடைந்த 27 பேருக்கு அரசு செலவில் சிகிச்சை அளிக்கப்படும் என்று முதல்வர் கூறியதாக ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
    சென்னை:

    சென்னை கந்தன்சாவடி மருத்துவமனையில் கட்டுமான பணியின்போது இரும்பு சாரம் சரிந்த இடத்தை தமிழக அரசின் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று பார்வையிட்டார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நேற்றையதினம் இரவு சுமார் 7.15 மணி அளவில் ஏற்பட்ட இந்த விபத்து பற்றி அறிந்ததும் அனைத்து துறை அதிகாரிகளும் விரைந்து செயல்பட்டு மீட்பு பணிக்கு உதவினார்கள்.

    இடிபாடுகளில் சிக்கியவர்களில் பப்லு என்பவர் உயிர் இழந்தார். 33 பேர் உயிருடன் மீட்கப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர். மேலும் 5 பேர் புறநோயாளியாக சிகிச்சை பெற்றுள்ளனர். 16 பேர் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் உள் நோயாளியாக உள்ளனர்.

    படுகாயம் அடைந்தவர்களுக்கு ஆகும் செலவை அரசே ஏற்கும் என முதல்- அமைச்சர் கூறி உள்ளார். எனவே தனியார் ஆஸ்த்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை அங்கிருந்து மாற்ற வேண்டாம் என்று நேற்று இரவு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த 3 பேருக்கு ஆபரேசன் செய்யப்பட்டது. 11 பேர் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியிலும், 16 பேர் அப்பல்லோ ஆஸ்பத்திரியிலும் இப்போது தொடர் சிகிச்சையில் உள்ளனர். ஒட்டு மொத்தமாக 27 பேர் உள்நோயாளிகளாகவும், 5 பேர் புற நோயாளியாகவும் சிகிச்சை பெற்றனர்.


    3 ஆம்புலன்ஸ் வண்டிகள் தொடர்ந்து தயார் நிலையில் உள்ளது. இது ஒரு தனியார் மருத்துவமனை கட்டிடம். இந்த கட்டிடத்துக்கு அனுமதி பெற்று இருக்கிறார்களா? என்பதை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    காஞ்சீபுரம் கலெக்டர் பொன்னையா கூறுகையில், “கட்டிட விபத்து குறித்த விசாரணை அறிக்கைப்படி மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கப்படும். காயம் அடைந்த தொழிலாளர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என்றார்.

    மாநில பேரிடர் மீட்பு குழு கமி‌ஷனர் ராஜேந்திர ரத்னு கூறுகையில், “மீட்பு பணியில் பேரிடர் மீட்பு குழுவினர் 50 பேர் ஈடுபட்டு வருகிறார்கள். சரிந்து விழுந்துள்ள ராட்சத இரும்பு தூண், சாரம், கம்பிகள் கியாஸ் வெல்டிங் மூலம் வெட்டி அகற்றப்பட்டு வருகிறது. இன்று மாலைக்குள் மீட்பு பணிகள் முடிந்து விடும் என்றார்.

    விபத்து குறித்து அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் ஜவகர் சண்முகம் கூறியதாவது:-

    தனியார் மருத்துவமனை கட்டுமான பணி விபத்து குறித்து அரசு உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். ராட்சத ஜெனரேட்டர் அறை அமைப்பு பணியில் அடித்தளம் உறுதித்தன்மை இல்லாததால் விபத்து ஏற்பட்டு உள்ளது. தரமற்ற கட்டுமான பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. கட்டிட காண்டிராக்டர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோல் விபத்து ஏற்படாமல் இருக்க முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Buildingcollapse #ChennaiBuildingcollapse 
    ×